தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் 64 வயதான சாலமோன். பனைத் தொழிலாளியான சாலமோன், சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் தனது மனைவி ஜெயசீலியுடன் தங்கி, பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம் போல், வியாழக்கிழமை (26.6.2025) அன்று சாலமோன் பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 70 அடி உயரமுள்ள பனை மரத்தின் உச்சியில் ஏறி, பதநீரைப் பானையில் சேகரித்துக் கொண்டிருந்தபோது, சாலமோனுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதனால், உடலின் ஒரு பகுதி செயலிழந்து, அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. மரத்தில் இருந்து கீழே இறங்க முடியாததால், சாலமோன் மரத்தின் மட்டைகளுக்குள் மயங்கிய நிலையில் சாய்ந்து அமர்ந்தார்.

இதற்கிடையே, சுப்பிரமணியபுரத்தில் உள்ள உறவினர் பொன்சீலியின் டீக்கடைக்கு சாலமோன் தவறாமல் டீ குடிக்க வருவது வழக்கம். ஆனால், சம்பவ நாளில், டீ குடிக்க வரும் நேரத்தைத் தாண்டியும், நீண்ட நேரமாகியும் சாலமோன் வராததால், பொன்சீலி அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு, பார்சல் டீயுடன் பனைமரத் தோட்டத்தை நோக்கிச் சென்றார்.

அப்போது, மரத்தின் உச்சியில் சாலமோன் பக்கவாதத்தால் உடலின் ஒரு பகுதி செயலிழந்து, பனை மரத்தில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததைக் கண்டு பொன்சீலி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அவர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பனையேறும் இளைஞரை வரவழைத்து, சாலமோன் கீழே விழுந்துவிடாமல் இருக்கும் வகையில் கயிற்றால் அவரைப் பத்திரமாகக் கட்டி வைத்தார்.

102

Advertisment

தகவலின் பேரில், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முத்து, எஸ்.ஐ. ஜான்சன் மற்றும் மீட்புப் பணி வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஏணியைப் பயன்படுத்தி பனை மரத்தில் ஏறி, ரோப் கயிறு கட்டி, பனைத் தொழிலாளி சாலமோனைப் பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர், மயக்க நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கமான நேரத்தைத் தாண்டியும் தனது கடைக்கு டீ குடிக்க வராததால், பார்சல் டீயுடன் பனைமரத் தோட்டத்திற்குச் சென்ற உறவினரால் பனைத் தொழிலாளி உயிர் பிழைத்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி