நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி அன்று தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகவும், விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் பரிமாறி, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். பலர் கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். இப்படி ஒரு புறம் தீபாவளியை மகிழ்ச்சியோடு பலரும் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில், முதலாளி தீபாவளி பரிசு கொடுப்பார் என்று காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள வாரோரா பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுஜித் கன்வீர். இவர் சொந்தமாக வெற்றிலைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 27 வயதான நிதேஷ் தாக்கரே என்பவர் ஊழியராகப் பணியாற்றி வந்தார். தீபாவளி அன்று (அக்டோபர் 20) தனது முதலாளியிடமிருந்து புதிய ஆடைகள் மற்றும் பரிசு கிடைக்கும் என நிதேஷ் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், சுஜித் எந்தப் பரிசும் வழங்கவில்லை. அவரின் எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. இதனால் அதிருப்தி அடைந்த நிதேஷ், முதலாளி சுஜித்திடம் தீபாவளி போனஸ் மற்றும் பரிசுப் பொருள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அந்த வாக்குவாதம் முற்றியதில், முதலாளி சுஜித்தை ஆபாசமாக ஊழியர் நிதேஷ் திட்டியிருக்கிறார்.
நமது கடையில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் நம்மைத் திட்டிவிட்டானே என்ற ஆத்திரத்தில், நிதேஷின் கதையை முடிக்க முதலாளி சுஜித் திட்டம் ஒன்றைத் தீட்டியிருக்கிறார். அதற்காகத் தனது நண்பர்களுடன் கலந்து பேசிய அவர், ஆன்லைனில் ஒரு கத்தியை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார். பின்னர், “தியேட்டருக்கு படம் பார்க்கப் போவோம் வா..” என்று நிதேஷை முதலாளி சுஜித் அழைத்துள்ளார். அவருடன் கடையில் நடந்தவற்றை எல்லாம் மறந்து, தன்னுடைய முதலாளி என்று நம்பி அவருடன் சென்றிருக்கிறார். சுஜித்துடன் அவரது நண்பர்களும் வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நிதேஷ், சுஜித் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் திரையரங்கம் நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத சட்டக்கல்லூரிக்குப் பின்னால் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு நிதேஷை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சுஜித்தின் நண்பர்கள் நிதேஷைச் சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டிருக்க, கொலை வெறியில் இருந்த சுஜித் தான் ஆன்லைனில் வாங்கிய கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிதேஷ் சம்பவ இடத்திலேயே துடித்துத் துடித்து உயிரிழந்துள்ளார்.
இதனைக் கவனித்த அவ்வழியாகச் சென்றவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிதேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பிறகு நிதேஷை கொலை செய்தது முதலாளி சுஜித் மற்றும் அவரது நண்பர்கள் என்பது உறுதியானது.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் சம்பவத்திற்குக் காரணமான சுஜித் கன்வீர், அவரது நண்பர்கள் கரண் மெஷ்ராம், யாஷ் சோட்டலால் ரவுத், அனில் ராமேஷ்வர் போண்டே, பிரதிக் மாணிக் மெஷ்ராம், தௌசிப் ஷேக் ஆகிய 6 பேரையும் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow Us