தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பல் அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி யுவராஜ். இவரது மனைவி மங்கம்மாள். இந்தத் தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகள் 16 வயதான கலையரசி (இங்கே பெண்ணின் நலன் கருதி அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பதைச் சேர்த்துப் படிக்க வேண்டும்). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தங்கவேலின் மகன் நிர்மல்குமார் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த மார்ச் 26 ஆம் தேதி காதல் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கலையரசி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனை அறிந்த சமூக நலத்துறை அலுவலர், குழந்தை திருமணம் மற்றும் கலையரசி கர்ப்பமாக இருப்பது குறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள், இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது, “பெண்ணுக்கு 18 வயது நிரம்புவதற்கு முன்னரே திருமணம் செய்துவிட்டீர்கள். குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் உங்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம். அப்படிச் செய்யக்கூடாது என்றால், உடனடியாக 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால், வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறேன்,” என்று பேரம் பேசியுள்ளார்.

ஆனால், பணம் கொடுக்க விரும்பாத கலையரசியின் மாமியார் மங்கம்மாள், இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டது தொடர்பாக தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. நாகராஜிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய டி.எஸ்.பி. நாகராஜ், மங்கம்மாளிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பியுள்ளார். மேலும், இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் மங்கம்மாளைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, மங்கம்மாள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் கொடுத்துள்ளார். அப்போது, அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக வீரம்மாளைப் பிடித்தனர். பின்னர், அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

குழந்தை திருமணம் நடந்திருப்பதை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல், அதனைத் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டரின் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.