கடந்த நவம்பர் மாதம் பீகார் மாநிலத்தில்   6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட மகா கூட்டணிக்கும் இடையே பெரும்போட்டி நிலவி வந்தது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றது. இந்த தேர்தல் முடிவுக்கு பின்னர் பல்வேறு  குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்காக பெண்களுக்கு பணம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.  

Advertisment

அதாவது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்,  பெண்களுக்கு தொழில் தொடங்க அரசு சார்பில் 10000 ரூபாய் வழங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக  தர்பங்கா பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்களின் வங்கி கணக்கில் இப்பணம் வரவு வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், ஆண்களின் பெயரில் வரவு வைக்கப்பட்ட இப்பணத்தை திருப்பி அளிக்க கோரி அதிகாரிகள் கூறியதையடுத்து, ஊர் மக்கள் பணத்தை திருப்பி தர முடியாது எனவும், செலவு செய்து விட்டதால் எங்களிடம் பணம் இல்லை என்றும் மக்கள் கூறினர்.

Advertisment

தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து. பணத்தை நாங்கள் திருப்பித் தரவேண்டுமாயின் நாங்கள் அளித்த வாக்கை திரும்ப கொடுங்கள் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறுவதில் அதிகாரிகள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.