கோவை மாவட்டம் அன்னூர் அருகே காரேகவுண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நல்லிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கட்டான் - நஞ்சம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இதில், இரு மகன்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித் தனியாக வசித்து வருகின்றனர். மகள்கள் மூன்று பேரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர்.
83 வயதான நஞ்சம்மாள்.. ஓர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.. தனது வாழ்நாள் முழுவதும் குடும்பத்தை கட்டிக் காத்து வந்ததோடு, அக்கம்பக்கத்தினருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி நஞ்சம்மாள் திடீரென காலமானார். இந்த துயரச் சம்பவம்.. அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
வழக்கமாக இறுதிச் சடங்குகளில் உடலை தூக்கிச் செல்லும் பொறுப்பு ஆண்களுக்கே வழங்கப்படும். ஆனால், இங்கு நஞ்சம்மாளின் உடலை அவரது மகள்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட சுமார் 40 பெண்கள் ஒன்றிணைந்து பாடை கட்டினர். அவர்கள் கும்மி அடித்து, பாடல்கள் பாடி, நஞ்சம்மாளின் உடலை இடுகாட்டுக்கு சுமந்து சென்றனர். இந்த நிகழ்வு, பெண்கள் ஆண்களுக்கு சமமாக எதையும் செய்ய முடியும் என்ற உறுதியான மனப்பான்மையை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, தாய் மீதான அவர்களின் அளவற்ற அன்பை உணர்த்தும் விதமாகவும் அமைந்தது.
இதுகுறித்து நஞ்சம்மாளின் மகள்கள் கூறுகையில், "எங்கள் தாய்தான் எங்களுக்கு எல்லாம். அவர் உயிரோடு இருக்கும்போது எங்களை வளர்த்து ஆளாக்கினார். இப்போது அவரது உடலை நாங்களே தூக்கிச் சென்று அடக்கம் செய்வதன் மூலம், அவருக்கான கடைசி கடமையை நிறைவேற்றியுள்ளோம் என்று உருக்கமாகக் கூறினர். மேலும், நஞ்சம்மாளின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும், கிராமத்தின் பெண்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் பெண்களின் இந்த செயலை பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். கிராமத்தின் இளைஞர்களும், ஆண்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இது போன்ற செயல்கள், சமூகத்தில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.