மழை வர வேண்டி பா.ஜ.க தலைவர் ஒருவரை பெண்கள் சிலர் சேற்றில் குளிப்பாட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பருவமழையை ஒட்டி, வடமாநிலங்களில் உள்ள பல இடங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நெளதன்வா என்ற பகுதியில் பல நாட்களாக மழை பெய்யாமல் இருந்து வருகிறது. அதிகப்படியான வெப்பத்தால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழை இல்லாததால் மக்கள் கவலையடைந்துள்ளனர். கடுமையான வெப்பம் குறைய வேண்டும் என்பதற்காகவும், தங்கள் ஊரில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும் நெளதன்வாவ் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பழங்கால பாரம்பரிய சடங்கை கையில் எடுத்தனர்.

அதாவது, கிராமத்தின் மரியாதைக்குரிய ஒருவர் சேற்றில் குளித்தால் மழையின் தெய்வமான இந்திரன் மகிழ்ச்சியடைவார் என்பது கிராமத்தினர் பாரம்பரிய நம்பிக்கை என்று கூறப்படுகிறது. முந்தைய காலங்களில் நகரத் தலைவர் அல்லது கிராமத் தலைவர் சேற்றிலும், நீரிலும் குளித்தால் இந்திரன் மகிழ்ச்சியடைவார் என்றும், மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் கிராம மக்களிடையே இருந்துள்ளது. அதன்படி, இந்த பாரம்பரிய சடங்கை கடைபிடிப்பதற்காக நெளதன்வா நகராட்சியைச் சேர்ந்த பெண்கள் சிலர், நெளதன்வா நகராட்சியின் முன்னாள் தலைவரும், பா.ஜ.க தலைவருமான குட்டு கான் என்பவரின் வீட்டிற்கு கஜ்ரி பாடல்களை பாடிச் சென்றுள்ளனர்.

அவரிடம் சடங்கு பற்றி எடுத்துக் கூறி அவரை அதற்கு சம்மதிக்க வைத்தனர். அதனை தொடர்ந்து, குட்டு கானை ஒரு நாற்காலியில் அமர வைத்து கைகளையும், கால்களையும் கட்டி பெண்கள் அவரை சேற்றில் குளிக்க வைத்தனர். அதன் பின்னர், அழுக்கு நீரால் குளிக்க வைத்தார்கள். சடங்கின் ஒரு பகுதியாக குட்டு கானை தரையில் தள்ளி சேற்றிலும், நீரிலும் குளிக்க வைத்தனர். குட்டு கானும், அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இந்த மரபை பின்பற்றி, பெண்கள் மத்தியில் மென்மையாக சிரித்துக் கொண்டே அனைத்து சடங்குகளையும் நிறைவேற்றினார்.

Advertisment