மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டியில் நேற்று (ஆகஸ்ட் 1) மாலை 6 மணியளவு பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு எட்டயபுரம், எப்போதும் வென்றான், குறுக்குச் சாலை வழியாக ஓட்டப்பிடாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.இரவு 7 மணியளவு குறுக்குச் சாலையைக் கடந்து வேலாயுதபுரம் கிராமம் அருகே அவரது வாகனம் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் கூட்டமாக நின்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் எடப்பாடி பழனிச்சாமியின் பஸ்ஸை வழிமறித்தனர்.
இதையடுத்து பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய எடப்பாடி பழனிச்சாமியிடம், ஒரு கிலோமீட்டர் தொலைவு அலைந்து தினமும் தள்ளு வண்டியில் குடங்களை வைத்து தள்ளிக் கொண்டு வந்து தண்ணீர் பிடித்து வருவதாக வேதனை தெரிவித்தனர். மேலும் அவரிடம் அந்த தண்ணீர் தள்ளு வண்டியைத் தள்ளச் சொல்லினர். தங்களுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி குடத்துடன் இருந்த தள்ளு வண்டிகளைத் தள்ளிப் பார்த்து, இவ்வளவு கஷ்டம் இருக்கிறதா எனக் கேட்டு, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் குடிநீர் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு கக்கரம்பட்டி, அகிலாண்டபுரம், ஆவரங்காடு, பாஞ்சாலங்குறிச்சி வழியாக ஓட்டப்பிடாரத்திற்கு சென்றார்.
பின்னர் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, குடிநீர் பிரச்சினைக்காக பெண்கள் தனது வாகனத்தை வழிமறித்து கோரிக்கை விடுத்த சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி