திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செங்குறிச்சி அருகே குரும்பப்பட்டியில், குடியிருப்புகள் மற்றும் அரசு மரருத்துவமனைக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, செங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குரும்பப்பட்டி பகுதியில், டாஸ்மாக் கடையுடன், சட்டவிரோதமாக சில்லறை மதுபான விற்பனைக் கடையும் இயங்கி வருகிறது. இந்தக் கடை, பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளதால், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், மது அருந்தியவர்கள் ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர், சட்டவிரோத சில்லறை மது விற்பனைக் கடைக்குள் நுழைந்து, அங்குள்ள விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை எடுக்குமாறு கூறியபோது, விற்பனையாளர் மறுப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதனிடையே, காவல்துறையினர் வருவதற்கு முன்பு, விற்பனையாளர் தப்பியோடினார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீரோவை சாலைக்கு இழுத்து வந்து, பூட்டை உடைத்து, அதிலிருந்த மது பாட்டில்களை எடுத்து, மதுவை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சட்டவிரோதமாக சில்லறை மது விற்பனை நடத்தி வந்த அலெக்ஸ் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.   சட்டவிரோத மதுபானக் கடைக்குள் நுழைந்து, மது பாட்டில்களை சாலையில் ஊற்றி பெண்கள் உள்ளிட்டோர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், குரும்பப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.