நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் திருடப்பட்ட நகைகளுடன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

ராமநாதபுரம் கீழக்கரை பகுதியில் உள்ள வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முகமது. வீட்டு வேலைக்கு பெண் வேண்டும் என தேடிவந்த நிலையில் ஹலிமத் நிஸ்மியா என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளார். நன்றாக பழகிய ஹலிமத் நிஸ்மியா வந்த சில நாட்களிலேயே வீட்டில் எங்கு பணம், நகை உள்ளது என கண்காணித்து தெரிந்து வைத்துக் கொண்டுள்ளார். காலப்போக்கில் வீட்டில் இருந்த சிசிடிசி கேமராக்களை ஆப் செய்து விட்டு அவ்வப்போது நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடிச் சென்றுள்ளார்.

Advertisment

நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக திருடிய நகைகளின் அளவு 22 பவுன்களை எட்டியுள்ளது. ஹலிமத் நிஸ்மியா மற்றும் அவரது தோழியான பர்வின்பானு ஆகியோர் மீது முகமதுவிற்கு சந்தேகம் எழுந்த நிலையில் கீழக்கரை காவல் நிலையத்தில் முகமது புகாரளித்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தாங்கள் எந்த நகையையும் எடுக்கவில்லை என இருவரும் தெரிவித்துள்ளனர். மேலும் புகார் கொடுத்த முகமது மீது பாலியல் குற்றச்சாட்டை இருவரும் வைத்தனர்.

தொடர்ந்து நகைகளை திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. 'மண்டை மேல இருக்க கொண்டைய மறந்திட்டியே' என்பதைப்  போல ஒரு இன்ஸ்டா வீடியோவால் இருவரும் சிக்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன் திருமண விழாவிற்கு சென்ற ஹலிமத் நிஸ்மியா மற்றும் அவரது தோழி  பர்வின்பானு ஆகியோர் முகமது வீட்டில் திருடிய நகைகளை அணிந்து கொண்டு ரீல்ஸ் எடுத்து அதனை பதிவிட்டுள்ளனர். இதனையறிந்து மீண்டும் கீழக்கரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Advertisment

அப்போது போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் நகைகளை திருடியதை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இருவரையும் கைது செய்துள்ள போலீசார் நகைகளை அவர்களிடம் இருந்து மீட்கும் பணியில் இறங்கியுள்ளதோடு இதுபோன்று வேறு இடங்களில் இருவரும் நகைத் திருட்டில் ஈடுபட்டனரா என்பதும் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.