இந்திய சமூகத்தில் சாதி மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆழமாக வேரூன்றி இருக்கும் இக்கொடூர சம்பவங்கள் தொடர்பாக திடுக்கிடும் தகவலை மத்தியப் பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, மாநிலத்தில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஆர்ஃப் மசூத் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த மாநில அரசு, சட்டமன்றத்தில் தரவுகளை வழங்கியது. அதில், 2022-2024ஆம் ஆண்டு வரையில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக மொத்தம் 7,418 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 7 பட்டியல் அல்லது பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், இந்த சம்பவங்களைச் சேர்ந்த 558 பெண்கள் கொலை செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் 338 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,906 பட்டியல் மற்றும் பழங்குடி சமூக பெண்கள், தங்கள் சொந்த வீடுகளிலேயே வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த சமூகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட இரண்டு பெண்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் சொந்த வீடுகளிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கூடுதலாக, 5,983 பாலியல் வன்கொடுமைகள் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் ஒவ்வொரு நாளும் சுமார் 5 பட்டியல் மற்றும் பழங்குடி பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. மாநில அரசு கொடுத்த தகவலில், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம், பட்டியல் மற்றும் பழங்குடி பெண்களுக்கு எதிராக 44,978 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் இந்த சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் சராசரியாக 41 குற்றங்கள் நடந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.