திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள எட்டியவாடி காப்புக்காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் ராமசாமி என்பவருக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தீபா மற்றும் ராமசாமி சந்தித்துக் கொண்ட பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராமசாமி கைக்குட்டையால் தீபாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
உடனே தீபாவின் உடலைக் காப்புக்காட்டு பகுதிக்கு எடுத்துச் சென்ற ராமசாமி யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளார். தீபா காணாமல் போனது குறித்துக் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் ராமசாமியை போலீசார் கைது செய்து விசாரித்த போது இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
தொடர்ந்து காப்பகாட்டு பகுதியில் தீபாவை உடலைப் புதைத்த இடத்தை ராமசாமி போலீசாருக்கு அடையாளம் காட்டிய நிலையில் பெண்ணின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை தூவப்பட்டு பூஜை நடந்ததற்கான அடையாளங்கள் இருந்தால் மாந்திரீக பூஜை நடத்தி தீபா நரபலி கொடுக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.