தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலன்-முருகவேணி தம்பதி. இவர்களுடைய மகன் பாரத். அதே தர்மபுரி மாவட்டம் மொரப்பூரைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவரை காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து உடல் நலக்குறைவால் அந்த பெண் குழந்தை இறந்து விட்டது. 2022 ஆம் ஆண்டு மீண்டும் இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இரண்டாவது பிறந்த பெண் குழந்தைக்கு காதணி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. காதணி விழாவிற்கு பத்திரிக்கை அடிப்பது குறித்து இருவீட்டாரும் கலந்து பேசினர். அப்போது திருமணத்தின் பொழுது எந்தவித சீர்வரிசை கொடுக்கவில்லை எனவே அதற்கெல்லாம் சேர்த்து காதணி விழாவிற்கு வேண்டும் என பரத் வீட்டார் தரப்பு ஸ்ரீபிரியாவின் வீட்டினரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாக பரத் ஸ்ரீபிரியா இடையே தகராறு ஏற்பட்டு அதில் பரத், ஸ்ரீபிரியாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு ஸ்ரீபிரியா வெளியேறியுள்ளார். பெண்ணின் வீட்டார் காவல் நிலையத்தில் தன்னுடைய மகள் காணாமல் போனதாக புகார் கொடுத்த நிலையில் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தர்மபுரி நகரை ஒட்டியுள்ள ஏரிப் பகுதியில் ஸ்ரீபிரியா சடலமாக மீட்கப்பட்டார். உடனடியாக அந்த பகுதி மக்கள் இந்த தகவலை காவல்துறைக்கு தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் ஸ்ரீபிரியாவின் உடலைக் கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீபிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவரது உறவினர்கள் வரதட்சணை கொடுமை காரணமாக அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.