கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சென்னைத் துறைமுகப் பகுதியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிக்டாக் செயலி மூலமாக மதுரை மாவட்டம், டி.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவருடன் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் செல்போன் எண்களைப் பகிர்ந்துகொண்டு மணிக்கணக்கில் பேசிவந்துள்ளனர். அப்போது, தனது முதல் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும், தாய் இறந்துவிட்டதாகவும், சித்தியின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதாகவும் காளீஸ்வரி சிவக்குமாரிடம் கூறியிருக்கிறார். மேலும், தனது சித்தி தன்னைத் துன்புறுத்துவதாகவும் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு காளீஸ்வரியை சிவக்குமார் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையும், அடுத்து ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இப்படியாக கடந்த 5 ஆண்டுகளாக சிவக்குமாரும் காளீஸ்வரியும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரி யாரிடமும் சொல்லாமல் வேறு ஒரு நபருடன் வீட்டைவிட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என்று சிவக்குமார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காளீஸ்வரியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போலீசார் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளனர். போலீசாரின் அழைப்பின்படி காவல் நிலையம் வந்த காளீஸ்வரி, “நான் காணாமல் எல்லாம் போகவில்லை; சொந்த விருப்பத்தின் பேரில் தான் சென்றுள்ளேன்” என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து காவல் துறை தரப்பில் எந்தவிதத் தகவலும் கணவர் சிவக்குமாரிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து “என் மனைவி வந்ததை ஏன் எனக்குத் தெரிவிக்கவில்லை; புகார் கொடுத்தது நான் தானே” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதற்கு காவல்துறையினர் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காளீஸ்வரியின் சொந்த ஊரான மதுரை டி.குன்னத்தூருக்கு சென்று சிவக்குமார், அங்கிருந்த மகாலட்சுமி என்பவரைப் பார்த்து, “நீங்கள் காளீஸ்வரியைப் பெற்ற தாயா அல்லது வளர்ப்புத் தாயா?” எனக் கேட்டுள்ளார். உடனே கண்கலங்கிய மகாலட்சுமி, “நான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகள்தான் காளீஸ்வரி” என்று கூறியிருக்கிறார். மேலும், தனது மகள் காளீஸ்வரியைப் பற்றி தாய் மகாலட்சுமி கூறிய உண்மைகளைக் கேட்டு சிவக்குமார் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.

Advertisment

காளீஸ்வரிக்கு ஏற்கனவே நான்கு திருமணங்கள் ஆகிவிட்டன. அதை மறைத்து ஐந்தாவதாக உன்னைத் திருமணம் செய்துள்ளார். முதலாவதாக சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், இரண்டாவதாக கோவையைச் சேர்ந்த சுரேஷ் குமார், மூன்றாவதாக ஜெயராஜ், நான்காவதாக லிங்குசாமி என்றும், ஐந்தாவதாக சிவக்குமார் என்ற உன்னைத் திருமணம் செய்துள்ளார். தற்போது உன்னுடன் வாழப் பிடிக்காமல் ஆறாவதாக ஆம்பூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பு காளீஸ்வரிக்கு நடந்த திருமணப் புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களையும் காண்பித்துள்ளார்.

இதனைக் கேட்டு உடைந்துபோன சிவக்குமார் தாய் மகாலட்சுமியிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் வாங்கிக்கொண்டு, சங்கராபுரம் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகம், விழுப்புரம் மண்டல காவல்துறைத் தலைவர் எனப் பல இடங்களில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டால் அதிகாரிகள் திட்டி அனுப்புவதாக சிவக்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி, பூச்சி மருந்து குடித்து தான் மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், உறவினர்கள் தடுத்துவிட்டனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமும் குழந்தைகளுடன் சென்று புகார் அளித்தார். மேலும், காளீஸ்வரி வீட்டைவிட்டுச் செல்லும்போது 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் எடுத்துச் சென்றுவிட்டார். எனக்கு முன்பு நான்கு பேரை ஏமாற்றி காளீஸ்வரி திருமணம் செய்துகொண்டார். ஆறாவதாக மணிகண்டன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். இதில் ஏற்கனவே அவரது நான்கு கணவர்களில் இருவர் மன உளைச்சலில் இறந்துவிட்டனர். தற்போது தனது இரண்டு குழந்தைகளும் தாயைக் காணாமல் கதறி அழுகின்றனர். எனக்கு வேறு யாரும் இல்லை; குழந்தைகளைப் பராமரிப்பதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் பொருளாதார ரீதியாகவும் கஷ்டப்படுகின்றேன். ஆகையால் எனது இரு குழந்தைகளையும் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகின்றேன். அவர்கள் அரசு நடத்தும் குழந்தைகள் நலப் பாதுகாப்பு விடுதியில் சேர்த்து வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் திருமண மோசடி செய்து பலரை ஏமாற்றிய காளீஸ்வரியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

4 திருமணங்களை மறைத்து ஐந்தாவதாக இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட பெண் தற்போது இரு குழந்தைகளையும் கணவரையும் தவிக்கவிட்டுவிட்டு, ஆறாவதாக வேறு நபரைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.