தெலங்கானா மாநிலம் மஞ்சேரியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதான மனீஷா. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான சிந்தம் ஸ்ரீகாந்த் என்பவருடன் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு 3 வயதில் அன்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு கணவர் சிந்தம் ஸ்ரீகாந்த் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
வீடு உள்பக்கமாகத் தாப்பாள் போட்டிருந்ததால் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சிந்தம் ஸ்ரீகாந்த், மனைவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்துள்ளனர். பின்னர் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனீஷாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டைச் சோதனை செய்தபோது மனீஷா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்த காவல்துறை மற்றும் கணவர் உள்ளிட்ட அங்கிருந்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்தக் கடிதத்தில், “ஸ்ரீ… என்னை மன்னித்துவிடு. அன்வியைப் பார்த்துக்கொள். இந்த எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது. ₹1,116ஐ அன்னவரம், திருப்பதி உண்டியலில் போடு. எல்லம்மாவுக்கு அரிசி வழங்க மறக்காதே” என்று கூறியுள்ளார்.
மைர்மெகோபோபியா (Myrmecophobia) என்ற நோய் காரணமாக மனீஷாவுக்கு சிறு வயதில் இருந்தே எறும்பின் மீது தீவிர பயம் இருந்து வந்துள்ளது. இதற்காக மனீஷா மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். மைர்மெகோபோபியா (Myrmecophobia) என்பது எறும்புகளைப் பார்த்தாலோ அல்லது அவை பற்றி நினைத்தாலோ ஏற்படும் தீவிரமான பயம் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட பய அறிகுறி (Specific Phobia) என்றும், சிறு வயதில் எறும்புகள் கடித்த அனுபவம், பெற்றோரிடமிருந்து கற்ற பயம் அல்லது மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மைர்மெகோபோபியாவால் பாதிக்கப்பட்ட மனீஷா சம்பவத்தன்று தனது வீட்டைச் சுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளார். கணவர் வேலைக்குச் சென்றுவிட்டதால், தனது மூன்று வயது மகளைப் பக்கத்து வீட்டில் இருந்த தனது உறவினரிடம் கொடுத்துவிட்டு, வீட்டைச் சுத்தம் செய்தபின் வந்து கூட்டிச் செல்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கிய மனீஷாவுக்கு எறும்புகளைப் பார்த்ததும் பயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அந்தப் பயத்தின் காரணமாகப் புடவையால் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்திருக்கிறது.
எறும்புக்கு பயந்து பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/4-2025-11-07-18-00-38.jpg)