திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான சித்ரா. அவரது கணவர் ஜான்சன், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தத் தம்பதியினருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவனை இழந்த சித்ரா மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் சித்ராவிற்கு அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மெக்கானிக் கருப்பண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்ந்து வந்த நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சித்ரா கருப்பண்ணனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். மேலும் இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போதே, எங்களுக்குள் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று எழுத்துபூர்வமாக இருவரும் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சித்ராவுடனான தொடர்பை கைவிட முடியாத கருப்பண்ணன், கடந்த வாரம் சித்ராவிடம் மீண்டும் பேச வந்துள்ளார். ஆனால், அதனை சித்ரா மறுத்ததால், அவரை கருப்பண்ணன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் 12 ஆம் தேதி காலையில் சித்ரா தனது மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த கருப்பண்ணன், தன்னுடன் ஏன் பேச மறுக்கிறார் என்று கேட்டுத் தகராறு செய்திருக்கிறார். மேலும் சித்ராவின் வீட்டிற்குள்ளும் நுழைய முயற்சித்திருக்கிறார். அதனை சித்ரா தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சித்ராவின் கை மற்றும் கால்களைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சித்ராவின் இடது கை உடைந்து தொங்கியுள்ளது. வலியால் சித்ரா அலறித் துடித்ததை கண்டு சற்று மனமிரங்கிய கருப்பண்ணன் உடனே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மட்டுமின்றி, அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் தான் சித்ராவை வெட்டி விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் காவல்துறையினரிடம் கருப்பண்ணனே சரணடைந்துள்ளார்.
இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்ராவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவரைக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண், பேச மறுத்ததால் அரிவாளால் வெட்டிவிட்டு அவரைச் சிகிச்சைக்காக ஆண் நண்பரே மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Follow Us