திருப்பூர் மாவட்டம் அவிநாசி வள்ளுவர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ் (63). அவிநாசி சிந்தாமணி தியேட்டர் பகுதியில் மர அறுப்பு ஆலையைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சின்னப்பராஜிற்கு பல பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல, அவிநாசியை அடுத்த நடுவச்சேரி பகுதியில் தனியாக வசித்து வரும் 42 வயதான பூமணி என்ற பெண்ணுடன் சின்னப்பராஜிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிற பெண்களுடன் இருக்கும் தொடர்பு குறித்து சின்னப்பராஜிக்கும் பூமணிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் வழக்கம் போல் அவிநாசியை அடுத்த சின்னேரிபாளையம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையின் ஓரம் இருந்த தடுப்புச் சுவரின் மீது அமர்ந்து இருவரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது சின்னப்பராஜிக்கும் பூமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூமணி தான் வைத்திருந்த செல்போன் பவர் பேங்கால் சின்னப்பராஜின் பின்பக்கத் தலையில் கடுமையாக அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறி சின்னப்பராஜ் கீழே விழுந்துள்ளார். அதன்பின்னர் பூமணி திட்டமிட்டு ஏற்கனவே கேனில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை சின்னப்பராஜ் மீது ஊற்றியுள்ளார். இதனால் பதற்றமடைந்த சின்னப்பராஜ் தப்பியோட முயன்ற போது பூமணி அவர் மீது தீ வைத்துள்ளார். ஏற்கனவே தலையில் பட்ட காயத்தால் நிலை குலைந்த சின்னப்பராஜ் உடலில் தீப்பற்றி பாதி எரிந்த நிலையில் சாலையோரம் இருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற பூமணி, மறுநாள் காலையில் அவிநாசி காவல் நிலையத்தில் நடந்ததை கூறி சரணடைந்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்த போது பூமணி கூறியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து சின்னப்பராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு வழக்குப் பதிவு செய்த போலீசார் பூமணியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தன்னுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபரைப் பெண் கொலை செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அவிநாசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/11/4-2025-11-11-17-21-36.jpg)