வேலூர் மாவட்டம், குடியாத்தம் வாரியார் நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நாயால் கடிக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது உடல் நிலை மோசமான நிலையில் காணப்பட்டதால், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இன்று அதிகாலை மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் இது வெறி நாய் கடி தாக்கம் என தெரிவித்ததோடு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும், மருத்துவமனை வளாகத்திலேயே தகனம் செய்யப்படும் எனவும் தெரிவித்ததாக பெண்ணின் உறவினர்கள் கூறினர்.
இந்தத் தகவல் பரவி, உறவினர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வெறி நாய்களால் கடிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் வெறி நாய்க் கடியில் முறையான சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தவர்களாக உள்ளனர், ஆனால் பலர் வெறி நாய்களின் கடிக்கு பலியாகி வருகின்றனர். அதன் தாக்கம் இறந்த உடலில் இருக்கிறது எனக் கூறி உடலை தர மறுத்து, மருத்துவமனை நிர்வாகம் தகனம் செய்யப்படும் என சொன்னது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.