சிதம்பரம் கோவில் தெருவைச் சேர்ந்த மணியின் மனைவி ராணி(61). இவர் சென்னையில் உள்ள தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 6-ஆம் தேதி நள்ளிரவு, சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லும் மண்ணை விரைவு ரயிலில், சொந்த ஊரான சிதம்பரத்திற்கு வருவதற்காக ராணியும் மணிகண்டனும் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர்.
அதிகாலை 4 மணிக்கு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் வந்து நின்றது. அப்போது, ரயில் நிலையத்தில் நின்றபோது, ராணி ரயிலிலிருந்து கீழே இறங்க முயன்றபோது கதவைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது ரயில் புறப்பட்டது. ராணிக்குப் பின்னால் இருந்த மற்றொருவர் உடனடியாக கதவைத் திறந்தார். வண்டி மெதுவாக புறப்பட்டபோது, ராணி நடைமேடையில் காலை வைப்பதற்குப் பதிலாக, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் காலை வைத்ததால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இவர் மீது ரயில் சக்கரம் ஏறியதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டு, அவரது உடலை வெளியே எடுத்த பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து சிதம்பரம் இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.