பஞ்சாயத்து கூட்டத்தின் போது பெண் பஞ்சாயத்து தலைவரை தாக்கி, அவரது ஆடைகளை கிழித்து முகத்தில் மை பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவரை, மற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

Advertisment

கரக்பூர் தொகுதியில் உள்ள சங்குவல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பஞ்சாயத்துக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஞ்சாயத்தின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கிராம பஞ்சாயத்தின் உறுப்பினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சுஜாதா தே என்பவர், தனது பகுதியில் பாதுகாப்புச் சுவர் கட்டப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பஞ்சாயத்து தலைவருமான தீபாலி சிங்கின் ஆதரவாளர்கள், சுஜாதா தேவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தீபாலி சிங்கின் ஆதரவாளர்களும், சுஜாதா தேவின் ஆதரவாளர்களும் பஞ்சாயத்துக் அலுவலகத்திற்குள்ளேயே மோதிக் கொண்டனர்.

மேலும், சுஜாதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீபாலி சிங்கின் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை அடித்து ஆடைகளைக் கிழித்து அவரது தலைமுடியைப் பிடித்து முகத்தில் மை பூசியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், பஞ்சாயத்து அலுவலகத்தை சுஜாதா பூட்டினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் தீபாலி சிங் ஊடகங்களிடம் பேசியதாவது, “மம்தா பானர்ஜி, தயவுசெய்து இப்போது என்னைப் பாதுகாக்கவும். என்னால் இனி எதையும் செய்ய முடியாது. நான் குற்றவாளி அல்ல. என்னிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளது” என்றார். அதே போல் தன் மீதான குற்றச்சாட்டுகளை சுஜாதா மறுத்தார். சுஜாதா கூறுகையில், “நான் என் பகுதியில் வேலை கேட்டேன். அதற்கு பதிலாக, அவர்கள் என்னை அடிக்க முயன்றனர். நானும் தாக்கப்பட்டேன். எனவே நான் ஒரு தீர்வைக் கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தை பூட்டியுள்ளேன். அனைவரும் வந்து தீர்த்த பிறகு அது திறக்கப்படும்” கூறினார்.