இமாச்சலப் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பரியத்தைப் பின்பற்றி சகோதரர்கள் இருவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பேசுபொருளாகி வருகின்றது.
இமாச்சலப் பிரதேச மாநிலம், சிர்மௌர் மாவட்டத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் உள்ள கிராமங்களில் ஹட்டி என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், இரண்டு ஆண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ளும் பாலியாண்ட்ரி என்ற பழமையான பழக்கவழக்கத்தை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.
அந்த பழக்கவழக்கத்தின் படி, ஒரு பெண் இரண்டு சகோதரர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, ஷில்லாய் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அவரது தம்பி கபில் ஆகிய இருவரும் குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதாவை திருமணம் செய்து கொண்டனர். கடந்த 12ஆம் தேதி இவர்களது திருமண விழா தொடங்கி 3 நாட்கள் வரை உள்ளூர் நாட்டுப்புற பாடகள் மற்றும் நடனங்களோடு நடைபெற்றன. பிரதீப் அரசுத் துறையில் பணிபுரிகிறார், அவரது தம்பி கபில் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
இது குறித்து சுனிதா கூறுகையில், ‘பாரம்பரியத்தை அறிந்திருந்திருக்கிறேன். எந்த அழுத்தமும் இல்லாமல் எனது முடிவை எடுத்துள்ளேன். அவர்கள் உருவாக்கிய மரபை மதிக்கிறேன்’ என்று கூறினார். அதே போல் பிரதீப் கூறுகையில், ‘இந்த பாரம்பரியத்தை பின்பற்றுவதால் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஒரு கூட்டு முடிவு. நாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம்’ என்று பிரதீப் கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தின் வருவாய் சட்டங்கள் இந்த பாரம்பரியத்தை அங்கீகரித்து அதற்கு ‘ஜோடிதாரா’ என்று பெயரிட்டுள்ளன. டிரான்ஸ்-கிரியில் உள்ள பதானா கிராமத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற ஐந்து திருமணங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.