தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வடகரை, அண்ணா நகரைச் சேர்ந்த குருசாமியின் மனைவி சுப்புலட்சுமி (72) தனது மருமகள் கீதாவின் தற்கொலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நீதி கேட்டுள்ளார். கணவரை இழந்த கீதா, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் தையல் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கீதா, ஜோதி என்ற பெண்ணிடம் வீட்டு அசல் ஆவணங்களை அடமானமாக வைத்து 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்தக் கடனுக்கு அசல் மற்றும் வட்டியாக 6 லட்சம் ரூபாய் செலுத்திய பின்னரும், ஜோதி, ஆவணங்களைத் திருப்பித் தர 13 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கீதா, பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதிலும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கந்துவட்டி மிரட்டலால் மனமுடைந்த கீதா,  தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, கீதாவின் மாமியார் சுப்புலட்சுமி, மூன்று பேரக் குழந்தைகளுடன் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கை சந்தித்து, கந்துவட்டி கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.