Advertisment

வரதட்சணைக் கொடுமை: 1 சவரன் நகைக்காக திருமணமான 4-வது நாளில் இளம்பெண் தற்கொலை!

103

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணைக் கொடுமையால் திருமணமாகி 78 நாட்களில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமையால் திருமணமாகி 4-வது நாளில் மற்றொரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகிலுள்ள முஸ்லீம் நகரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான லோகேஸ்வரிக்கும், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி இரு வீட்டாரின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர், பன்னீரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு லோகேஸ்வரியைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு மாப்பிள்லை வீட்டார் 10 சவரன் நகை வரதட்சணையாகக் கேட்டுள்ளனர். ஆனால், பெண் வீட்டார் 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, 4 சவரன் நகையுடன் சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் சீதனமாக வழங்கியிருந்தனர்.

Advertisment

இந்நிலையில், குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் நகை வரதட்சணையாகக் கொண்டு வந்ததாகக் கூறி, மீதமுள்ள 1 சவரன் நகையைக் கொடுக்குமாறு பன்னீரின் குடும்பத்தினர் லோகேஸ்வரியைக் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. மறு வீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு வந்த லோகேஸ்வரி, கணவர் வீட்டில் நடைபெறும் கொடுமைகளை தனது தாய் மற்றும் தங்கையிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். காலையில் எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும், பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும், சோபாவில் அமரக் கூடாது என மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் தன்னை அவமதித்து கொடுமைப்படுத்தியதாக அவர் கண்ணீர் மல்கக் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சூழலில், நேற்று(30.7.2025) இரவு தனது தாய் வீட்டில் கழிவறைக்குச் சென்ற லோகேஸ்வரி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் கழிவறைக்குச் சென்று பார்த்தபோது, லோகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் லோகேஸ்வரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர், லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். அதன் பின் வழக்குப் பதிவு செய்த போலீசார் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரு சவரன் நகைக்காக வரதட்சணைக் கொடுமையால் திருமணமான 4-வது நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

tiruvallur police dowry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe