புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இன்று (18.09.2025 - வியாழக் கிழமை) மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதே போல, ஆவுடையார்கோயில் அருகே வீரமங்கலம் பகுதியிலும் மழை பெய்த போது பஞ்சநாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவி அஞ்சலை (வயது 52) ஆகியோர் வயல்வெளியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு தங்கள் வயலில் களைபறித்துள்ளனர்.
அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் இருவரும் அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் ஒதுங்கி நின்றுள்ளனர். அந்த நேரத்தில் மின்னல் தாக்கியதால் அஞ்சலைச் சுருண்டு விழுந்துள்ளார். அருகில் நின்ற கணவர் அதிர்ச்சியுடன் ஊருக்குள் தகவல் சொல்லி உறவினர்கள் வந்து பார்த்த போது அஞ்சலை உயிர் பிரிந்திருந்தது. உடனே பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் குறித்து ஆவுடையார்கோயில் போலிசாரும் வருவாய்த்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர். வயலில் வேலை செய்யச் சென்ற பெண் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, அறந்தாங்கி அருகே அரசர்குளம் அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மனைவி சின்னப்பொண்ணு தனது மாட்டை மேய்ச்சலுக்காக வயல்வெளியில் கட்டி விட்டுள்ளார். மாலையில் மழை பெய்த பிறகு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வரச் சென்று பார்த்த போது மின்னல் தாக்கி மாடு இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஒரே நாளில் இருநூறு இடங்களில் மின்னல் தாக்கி பெண் மற்றும் மாடு பலியான சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.