அண்மையில் பாலக்காடு ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் சாதாரணமாக கொட்டாவி விட்டார். ஆனால், அதற்குப் பின் அவரால் வாயை மூடவே முடியாமல் கடுமையான வலியால் அவதிப்பட்டார். அதன்பின் அங்கு வந்த மருத்துவர் ஒருவர் அளித்த சிகிச்சைக்குப் பின் அந்த இளைஞரின் வாய் இயல்பு நிலைக்கு வந்தது. இந்தச் சம்பவம் அப்போது பேசுப்பொருளாக மாறிய நிலையில், இதே போன்றதொரு சம்பவம் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்தேறியிருக்கிறது.
ஔரையா(Auraiya) மாவட்டத்தில் திபியாபூரைச் சேர்ந்தவர் 42 வயதான இன்கலா தேவி. இவர் கடந்த 1-ஆம் தேதி இரவு பானிபூரி சாப்பிடுவதற்காக ஆசையோடு தனது வாயைத் திறந்துள்ளார். ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக அவரது தாடை விலகியது. அதனால் அவரது வாயைத் திரும்ப மூட முடியாமல் வலியால் தவித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், வலியால் துடித்த இன்கலா தேவியை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அதனால் சிறப்புச் சிகிச்சைக்காக சைஃபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மனோஜ் மற்றும் சத்ருகன் சிங் ஆகிய இருவரும் இன்கலா தேவிக்குச் சிகிச்சை அளித்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு விலகிய தாடையை மீண்டும் சரி செய்து, இன்கலா தேவியின் வாயை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.
இது குறித்து மருத்துவர் சத்ருகன் சிங் கூறுகையில், “அதிக அளவில் வாயைத் திறந்ததாலோ அல்லது ஏற்கெனவே இருந்த தாடை மூட்டுப் பிரச்சினையாலோ இது நடந்திருக்கலாம். பானிபூரி போன்ற பெரிய அளவிலான உணவுகளைச் சாப்பிடும்போது இது போன்று தாடை விலகும் அபாயம் உள்ளது” என்றார். சைஃபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இன்கலா தேவி தற்போது முழுமையாகக் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். மென்மையான உணவு உட்கொள்ளவும், அதிகமாக வாயைத் திறக்காமல் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Follow Us