காஞ்சிபுரம் அருகே வெள்ளை கேட், பாலாஜி நகர் அரசு மதுபானக் கடை பின்புறத்தில் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த அஸ்வினி (வயது 30) என்ற இளம்பெண், தலையில் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் மயக்கமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அஸ்வினியின் கணவர் ஜெய் சுரேஷ், கூடுவாஞ்சேரி பகுதியில் வார்டனாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் பழக்கம் உள்ளது. இந்தத் தம்பதிக்கு 10 வயது மகளும், 8 வயது மகனும் உள்ளனர். அருகில் மதுபானக் கடை இருப்பதாலும், வீடு தனிமையாக இருப்பதாலும், அஸ்வினி தனது குழந்தைகளுடன் வையாவூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 23 அன்று, ஒரு சுப நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டு, பாலாஜி நகரில் உள்ள தனது வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலை திரும்புவதாக அஸ்வினி தனது பெற்றோரிடம் தெரிவித்திருந்தார். ஆனால், ஜூலை 24 அன்று பிற்பகல் வரை அவர் வராததால், பெற்றோர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தபோது, அஸ்வினி தலையில் பலத்த காயங்களுடன், ஆடைகள் இல்லாமல் நிர்வாண நிலையில், இரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பொன்னேரி கரை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக அஸ்வினியை மீட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மாலை அஸ்வினி உயிரிழந்தார்.

Advertisment

இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சங்கர் கணேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. குற்றவாளியைக் கைது செய்ய, டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமையில் ஐந்து காவல் ஆய்வாளர்களைக் கொண்ட ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

அஸ்வினியைத் தாக்கியவர் யார்? தாக்குதலின் நோக்கம் என்ன? பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாரா? வீட்டில் உள்ள பொருட்கள் திருடப்பட்டனவா? என பல கோணங்களில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அஸ்வினியை கத்தி அல்லது இரும்பு கம்பியால் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மர்ம நபர் தப்பியிருக்கலாம் என்றும், அவர் ஏற்கனவே அறிமுகமானவராக இருக்கலாம் என்றும் ஒரு காவலர் தெரிவித்தார்.குறிப்பிடத்தக்க வகையில், சில தினங்களுக்கு முன்பு பொன்னேரி கரை பகுதியில் 40 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.