அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவரது கணவர் செல்வம். இவர் கடந்த பத்து ஆண்டுகளாகத் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. செல்வம் ஆண்டிற்கொரு முறை வீட்டிற்கு வந்து தனது மனைவி மற்றும் மகளைப் பார்த்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், இத்தகைய சூழலில் தான் பிரியாவிற்கு, அவரது பின் வீட்டில் வசிக்கும் ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் நெருக்கமான உறவாக மாறியுள்ளது. அதன் காரணமாகத் தனது கணவன் துபாயில் இருந்து அனுப்பி வைக்கும் பணத்தை ராஜாவிடம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிரியா கடந்த வெள்ளிக்கிழமை (20.02.2026) இரவு பிரியா, ராஜாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே பணம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரியா அன்றிரவு அங்கேயே தங்கியுள்ளார். அதன் பின்னர், ராஜா தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், அங்குள்ள மின்விசிறியில் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிகாலை மூன்று மணியளவில் துக்கத்தில் இருந்து எழுந்த ராஜா, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து செந்துறை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ராஜா தான் பிரியாவை அடித்துக் கொன்றுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்த பின்பு பிரியாவின் உடலை, காவல்நிலையத்தின் முன்பு வைத்து மறியல் போராட்டம் நடத்த உறவினர்கள் திட்டமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த உறவினர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பிரியாவின் தாயார், ராஜா தான் பிரியாவை தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்தார்.
இதையடுத்து, ராஜாவைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பிரியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மம் நீடித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us