மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன். இவரது மனைவி தனபாக்கியம். இந்த தம்பதியின் மகன் ரூபன்ராஜ். இவருக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த அக்னி - செல்வி என்ற தம்பதியின் மகள் பிரியதரிசினிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது ரூபன்ராஜ் குடும்பத்தினர், பிரியதரிசினி குடும்பத்தினரிடம் 300 பவுன் கேட்டதாகவும், இதில் 150 பவுன் வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள 150 பவுன் நகையைக் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வற்புறுத்தியதன் காரணமாக இருவரிடமே தொடர்ந்து கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

Advertisment

அதோடு இது தொடர்பாக ஏற்கனவே காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த பிரச்சனை முற்றிய நிலையில் இவர் இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இதற்கு ரூபன்ராஜ் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரியதரிசினி அளவுக்கு அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தர். 

இந்நிலையில் பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் மருத்துவமனை முன்பாக மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தின் பெண்ணின் கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன் மற்றும் மாமியார் தனபாக்கியம்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் வரதட்சணை கொடுமை காரணமாகப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.