உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரோஷ்னி கான். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் கானுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதியருக்கு 7 வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருந்து. கருத்து வேறுபாடு காரணமாக, ரோஷ்னி தனது கணவர் ஷாருக்கைப் பிரிந்து, தனது குழந்தையுடன், தனியாக ரோஷினி கான் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஷாருக்கின் நெருங்கிய நண்பரான உதித் என்பவருடன் ரோஷ்னிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்தப் பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த ஜூலை 15 அன்று ரோஷ்னி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (112) தொடர்பு கொண்டு, தனது கணவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 7 வயது மகளை கொலை செய்துவிட்டு சென்றதாக பரபரப்பு புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஷாருக் வந்து சென்றதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், ஷாருக்கின் இருப்பிடத்திற்கு சென்று விசாரித்தபோது, அவர் அண்மையில் நடந்த விபத்தில் சிக்கி காலில் பலத்த காயமடைந்து, நடக்க முடியாத நிலையில் இருப்பது தெரியவந்தது.
இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையின் சந்தேகம் ரோஷ்னியின் பக்கம் திரும்பியது. முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த ரோஷ்னி, பின்னர் தானும் தனது காதலன் உதித்தும் சேர்ந்து 7 வயது மகளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
கடந்த ஜூலை 13 அன்று, உதித் ரோஷ்னியின் வீட்டிற்கு சிகரெட், மது மற்றும் உணவு உள்ளிட்டவற்றுடன் வந்திருக்கிறார். இருவரும் மது அருந்திவிட்டு, படுக்கையறையில் உடலுறவில் ஈடுபட்டபோது, ரோஷ்னியின் 7 வயது மகள் தற்செயலாக அதனைப் பார்த்துவிட்டார். மேலும், தனது தந்தை ஷாருக்கானுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரோஷ்னியும் உதித்தும் சிறுமியைப் பிடித்து, வாயில் கைக்குட்டையை வைத்து அடைத்துள்ளனர். பின்னர், உதித் தனது காலால் சிறுமியின் வயிற்றை அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
குழந்தையை கொலை செய்த பிறகு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், இருவரும் குளியலறையில் குளித்துவிட்டு மது மற்றும் உணவுகளை உட்கொண்டுவிட்டு, குழந்தையின் சடலத்திற்கு அருகே மீண்டும் உடலுறவு வைத்துகொண்டு படுக்கையறையில் தூங்கியுள்ளனர். மறுநாள் (ஜூலை 14) காலை, உடலை வீட்டிலுள்ள பெட்டியில் மறைத்துவிட்டு, இருவரும் நகரத்தில் பல இடங்களுக்கு சென்று மது விருந்தில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் ஹுசைன்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு சொகுதி விடுதியில் அறை எடுத்து ஒன்றாக தங்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 15 அன்று வீடு திரும்பியபோது, குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதை மறைக்க, ரோஷ்னி ஏர் ஃப்ரெஷ்னர் மற்றும் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தியிருக்கிறார். இதனிடையே கொலை பழியை கணவர் ஷாருக்கான் மீது போட்டுவிட்டால், அவர் சிறைக்கு சென்றுவிடுவார். அதன்பிறகு உதித்துடன் சேர்ந்து வாழ்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று, திட்டம்போட்ட ரோஷினி போலீஸுக்கு போன் செய்து, பொய்யான புகார் அளித்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து காவல்துறையினர் ரோஷ்னி மற்றும் அவரது காதலர் உதித் ஆகியோரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் தந்தை ஷாருக் கூறுகையில், “நானும் உதித்தும் 8 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தோம். எனது மகள் அவனை ‘உதித் மாமா...’ என்று அழைப்பாள். அப்படி இருந்தும், அவன் என் குழந்தையை கொன்றுவிட்டான்” என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
திருமணத்தை மீறிய உறவால், தனது 7 வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு, அவரது உடலுக்கு அருகே மது அருந்தி, ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த தாயின் செயல் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.