பெங்களூரு உத்தரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான பெண் நேத்ராவதி. இவருக்கு திருமணமாகி 17 வயதில் ஒரு மகள் உள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் நேத்ராவதி கருத்துவேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனது 17 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அவரது 17 வயது மகள் 10 ஆம் வகுப்பு தோல்வியடைந்ததால், படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்தச் சூழலில் சகோதரி அனிதா, நேத்ராவதிக்குப் போன் செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் போனை எடுக்காததால், அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். கதவு வெளிப்பக்கமாகத் தாப்பல் போடப்பட்டிருந்தால், ஜன்னல் வழியாக அனிதா பார்த்தபோது, தனது சகோதரி நேத்ராவதி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று, தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சூழலில் நேத்ராவதியின் 17 வயது மகள் திடீரென காணாமல் போயிருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் அவர் 18 வயதை நிரம்பாதவர் என்பதால், அதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் 17 வயது சிறுமி, கக்கலிபுராவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் பாட்டியிடம் சிறுமி, “25 ஆம் தேதி இரவு எனது நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது அம்மா போலீசுக்கு போன் செய்துவிடுவேன் என்று மிரட்டினார். அதனால் அவர்கள் அம்மாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து அறையில் தூக்கில் தொங்கவிட்டனர். கத்தியைக் காட்டி இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினர். அதனால் அங்கிருந்து வெளியேறித் தோழியின் வீட்டில் தங்கியிருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, சிறுமி பாட்டி வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற போலீசார், அவரைப் பெங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். முதலில் அவர் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்திருக்கிறார். அதேசமயம், சிறுமி தோழியின் வீட்டில் இல்லை என்றும், அவரது காதலரின் வீட்டில் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் தாய் நேத்ராவதியை காதலனுடன் சேர்ந்து சிறுமி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் கூறிய தகவல்கள் போலீசாரையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சிறுமி பள்ளியில் படித்தபோதே வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். அந்த வாலிபருக்கும் 18 வயது நிரம்பவில்லை. இருப்பினும் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அக்டோபர் 24 ஆம் தேதி ஷாப்பிங் மாலில் இருவரும் சந்தித்துக்கொண்ட போது, அடுத்தநாள் தனது வீட்டிற்கு வரும்படி சிறுமி அந்த வாலிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். மறுநாள் அதாவது 25 ஆம் தேதி, இரவு உணவைச் சாப்பிட்ட தாய் நேத்ராவதி, அசந்து தூங்கியுள்ளார். அந்த நேரம் பார்த்து சிறுமியின் வீட்டிற்கு அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது இரவு 10 மணியளவில் தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்த நேத்ராவதிக்கு, தனது மகளுடன் 4 பேர் நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், தான் மகள் காதலிப்பதைத் தெரிந்து கடும் ஆத்திரமடைந்து, இது தொடர்பாக போலீசில் போன் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி மற்றும் அவரது காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேத்ராவதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அதனைத் தற்கொலை என்று மாற்றுவதற்காக நேத்ராவதியின் கழுத்தில் துணியைக் கட்டி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர், சிறுமி, அவரது காதலன் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேருக்கும் 18 வயது ஆகவில்லை என்பதும், அதிலும் ஒரு சிறுவனுக்கு 13 வயதுதான் ஆவதும் தெரியவந்துள்ளது.
காதலுக்காகவும், காதலனுக்காகவும் தனது தாயையே சிறுமி கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/01/untitled-1-2025-11-01-17-53-52.jpg)