விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் திருமலைநாயக்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாயாரம்மாள் (84). ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், தனியாக வசித்து வந்துள்ளார். அவரது மருமகளும் அதே பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர் பகல் நேரங்களில் தனது மாமியாரைக் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11 தேதியன்று நீண்ட நேரமாகியும் தாயாராம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால், அதே வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் நபர் அவரது மருமகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

தகவல் அறிந்து வந்த உறவினர்கள், வீட்டினுள் சென்று பார்த்தபோது தாயாரம்மாள் சடலமாகக் கிடந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக இறந்துள்ளார் என நினைத்த உறவினர்கள் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது, மூதாட்டி அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள், கம்மல், வளையல் உள்ளிட்ட 5 சவரன் நகைகள் காணாமல் போனதால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீடு முழுவதும் தேடியுள்ளனர். இருப்பினும், அந்த நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும், தயாரம்மாளின் செல்போனும் காணாமல் போனதையடுத்து, சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்து சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

Advertisment

இதையடுத்து, வெளியான மருத்துவ உடற்கூராய்வு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. அதாவது, அறிக்கையில் மூதாட்டி மூச்சுத்திணறி உயிர் இழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், மூதாட்டியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, அவரது செல்போனுக்கு கடைசியாக ஜமுனா என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கோவையில் தனது மகள் வீட்டில் இருந்த ஜமுனாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.  

இந்த விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜமுனா, மூதாட்டியின் வீட்டினருகே வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஜமுனா அவ்வப்போது மூதாட்டியிடம் 1000, 2000 என தனது தேவைகளுக்காகக் கடன் பெற்றுவந்துள்ளார். அந்த வகையில், கடந்த 10 தேதி தாயாரம்மாளை பார்க்க வந்த ஜமுனா, அன்றிரவு அவருடனே தங்கியுள்ளார். இரவில், தனக்கு அதிக கடன் இருப்பதாகவும் அதனால் தனக்குப் பணம் வேண்டும் என்றும் தாயாரம்மாளிடம் ஜமுனா கேட்டுள்ளார். அதற்கு தாயாரம்மாள் மறுப்பு தெரிவிக்கவே, இரவு இரண்டு மணியளவில் மூதாட்டியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகள், பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளார். பின்னர், மூதாட்டியின் செல்போனை அருகில் இருந்த ஓடையில் வீசியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருடப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ஜமுனாவை குற்றவியல்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisment