மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த சிவபக்தரான செல்வமாலினி. இவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பல்வேறு ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல 26 ஆம் தேதி இரவு பணிகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து செல்வமாலினி வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது மதுரை வக்கீல் புது தெரு சந்திப்புப் பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதை ஓரமாகத் தள்ளிவிடுவதற்காகத் தனது காலால் எட்டி உதைத்தபோது சாக்குமூட்டையில் 500 ரூபாய் பணக்கட்டுகள் இருப்பது போலத் தெரிந்துள்ளது. இதைப் பார்த்து பதற்றமடைந்த செல்வமாலினி அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை வாகனத்தில் இருந்த காவலரை அழைத்துத் தகவலை கூறியிருக்கிறார்.
பின்னர் சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டுகட்டாக இருந்துள்ளது. பின்னர் செல்வமாலினி அந்தச் சாக்குமூட்டையை விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளார். அப்போது செல்வமாலினியின் நேர்மையைப் பார்த்துக் காவல்துறையினர் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையடுத்து சாக்குமூட்டையில் கிடந்த பணம் யாருடையது என்பது குறித்தான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சாக்குமூட்டையில் கிடந்த பணம் ஹவாலா பணமா? வேறு யாரும் வியாபாரிகள் கொண்டுவந்த பணமா என விளக்குத்தூண் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டுக்கட்டாகப் பணத்தைப் பார்த்த போது, அதன் மீது ஆசை கொள்ளாமல், உடனடியாக மீட்டுக் காவல்துறையிடம் ஒப்படைத்த செல்வமாலினியின் நேர்மைக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us