ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண் ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக, கடந்த ஜூன் 24 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். வழக்கமாக, ப்ரீத்தி கணவருடன் தகராறு ஏற்பட்டால், கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, பின்னர் கோபம் தணிந்தவுடன் தானாகவே வீட்டிற்குத் திரும்புவது வழக்கம்.  ஆனால், இந்த முறை நிலமை வேறாக இருந்துள்ளது. ஒரு நாளாகியும் ப்ரீத்தி வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது கணவர், ஜூன் 26 அன்று பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ப்ரீத்தியைத் தேடி வந்தனர்.

இதற்கிடையே, ஜூன் 24 அன்று வீட்டைவிட்டு வெளியேறிய ப்ரீத்தி, பனிபட் ரயில் நிலையத்தில் அமர்ந்துள்ளார். அப்போது, அவரது கணவர் அனுப்பியதாகக் கூறி, ஒரு மர்ம நபர் ப்ரீத்தியை அணுகியுள்ளார். முதலில் தயங்கிய ப்ரீத்தி, பின்னர் அந்த நபரின் பேச்சை நம்பி அவருடன் சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ப்ரீத்தியை பானிபட் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலி ரயில் பெட்டிக்கு அழைத்துச் சென்று அந்த நபர், அங்கு வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அங்கு வந்த அவரது மற்ற இரு நண்பர்களும் சேர்ந்து ப்ரீத்தியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.

இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் ப்ரீத்தியை சோனிபட் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டனர். இதனால், ரயில் மோதியதில் ப்ரீத்தியின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர், ப்ரீத்தியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக ரோஹ்தக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சை பெற்று வரும் ப்ரீத்தியிடம் சோனிபட் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, கணவருடன் தகராறு செய்து வீட்டைவிட்டு வெளியேறியது, பின்னர் ரயில் பெட்டியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, மற்றும் தண்டவாளத்தில் தள்ளப்பட்டது குறித்து காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். அந்தக் குழு, ரயில் நிலையத்தில் உள்ள CCTV காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறது.