ஈரோட்டில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டவலுவு பகுதியைச் பார்த்திபன். லாரி ஓட்டுநரான இவருடைய மனைவி ருக்மணி. சம்பவத்தன்று மனைவி ருக்மணி பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாக பார்த்திபன் அலறி கத்திக்கொண்டே தெருவில் ஓடி உள்ளார். இதைக்கேட்டு அச்சமடைந்த அந்த பகுதி மக்கள் சிறுவலூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்தபோது ருக்மணி உயிரிழந்து கிடந்தார். போலீசார் விசாரணையில் பார்த்திபன் இயக்கிய லாரி விபத்தில் சிக்கியதால் லாரி ஓட்டும் பணிக்கு அவர் செல்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து மது பழக்கத்திற்கும் அவர் அடிமையானதாக் கூறப்படுகிறது. இந்நிலையில் ருக்மணி தன்னுடைய சகோதரர் வைத்திருந்த பொலிரோ கார் ஒன்றை ஓட்டுவதற்கு கணவர் பார்த்திபனுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதையும் விற்று பார்த்திபன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று மனைவியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துவிட்டு மனைவி பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியும்படி கூச்சலிட்டு விட்டு பார்த்திபன் தலைமறைவானார். கொலையில் ஈடுபட்ட பார்த்திபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.