கோவை, கணபதி அருகே உள்ள மணியகார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் வீட்டில், கடந்த ஏழு வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வரும் ராமு (38), அவரது கணவர் மனோகரன் மற்றும் மகன் பூமிநாதனுடன் வாடகைக்கு குடியிருக்கிறார். அவர்கள் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாதம் ரூ.4,000 வாடகை செலுத்தி தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாத்தாள், முன்னாள் மேயர் கல்பனா, ஆனந்தகுமார், பத்மா, சிவா ஆகியோர் வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டியதோடு, வீட்டு உரிமையாளரையும் தாக்கியதாக அங்கு குடியிருக்கும் ராமு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வீட்டைப் பூட்டிவிட்டு தொடர்ந்து மிரட்டி வருவதால், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவர் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் வீட்டிற்கு வந்து மிரட்டும்போது, "முன்னாள் மேயர் கல்பனாவுக்கு முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் ஆதரவு உள்ளது; உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்றும், ஜாதி பெயரைக் கூறி தகாத வார்த்தைகளால் பேசியும், மின்சார வயரைத் துண்டித்தும் உள்ளனர். அது குறித்து கேள்வி எழுப்பியபோது, "வீட்டைக் காலி செய்ய சொன்னால் திமிராக நியாயம் பேசுறியா?" என மகனை கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்துவதாக ராமு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, காவல்துறையினர் ஜாதிப் பெயரைக் கூறி திட்டியதற்காக அவர்கள் மீது ஜாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு அளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.