கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரைச் சேர்ந்தவர் மகேந்திர பிரபு. இவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு நிர்வாகியான அசோக்குமாருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி அசோக்குமார் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில நபர்களுடன் மகேந்திர பிரபுவின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், மாறி மாறி அரிவாளால் வெட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் மகேந்திர பிரபுவின் கைவிரல்கள் துண்டாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் மகேந்திர பிரபுவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் காவல்துறையில் மகேந்திர பிரபு புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு நிர்வாகி அசோக்குமார், சரவணன், வசந்தகுமார், பிரவீன் ஆகிய நான்கு பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சரவணன் மற்றும் பிரவீனை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அசோக்குமார் மற்றும் வசந்தகுமாரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, அரிவாளால் வெட்ட முயன்றதாக சரவணன் அளித்த புகாரின் பேரில் மகேந்திர பிரபு மற்றும் அவரது சகோதரர் மணிபாரதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் மணிபாரதியை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி அசோக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளால் தனக்கும் தனது குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மகேந்திர பிரபுவின் மனைவி கவுசல்யா, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், அசோக்குமார் வீட்டிற்கு வந்தபோது, "நான் பாஜகவில் இருப்பதால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என்று கூறி, தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கவுசல்யா தெரிவித்துள்ளார்.
முன்பகை காரணமாக கணவரை வெட்டிவிட்டு, அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் கொலைமிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியின் செயல் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.