மத்தியபிரதேசம், போபாலின் கோலார் பகுதியைச் சேர்ந்தவர் சோனு (18 ) என்ற இளைஞர். இவர் ராஜஸ்தானின் ஜலாவார் மாவட்டத்தில் உள்ள புலோரோ கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் சுமார் 15 நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி போபாலுக்கு வந்து, அங்கு சோனுவுடன் தங்கியுள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர், போபாலுக்கு வந்து அப்பெண்ணை ராஜஸ்தானுக்குத் திரும்ப அழைத்து சென்றனர்.
அதன் பிறகு அந்தப் பெண், தன்னைச் சந்திக்க ராஜஸ்தானுக்கு வருமாறு சோனுவை தொலைபேசியில் அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று, சோனு புலோரோ கிராமத்திற்கு சென்றார். அவர் புலோரோ கிராமத்திற்கு வந்தவுடன், அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரைக் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து சோனுவை பல மணிநேரமாக இடைவிடாமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கும்பலால் சோனு பல மணி நேரம் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் மீது உடல்ரீதியான வன்முறை நடத்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் அவரை அவமானப்படுத்தும் விதமாக சோனுவை சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தி, அதை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
பின்பு, அந்த வீடியோவை போபாலில் உள்ள சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளனர். இது சோனுவின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால், சோனுவின் குடும்பத்தினர் உடனடியாக கோலார் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குற்ற சம்பவம் நடந்துள்ளதை கோலார் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு, சோனுவின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து குறித்து காவல் ஆய்வாளர் சஞ்சய் சோனி, ‘ஒரு சிறப்பு காவல் படை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவம் குறித்தான வீடியோ சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் அடையாளம் காணும் பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதோடு, கடத்தல், சட்டவிரோத காவலில் வைத்தல், தாக்குதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்பான பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்கு குறித்து தீவிரமான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/20/bo-2026-01-20-15-40-18.jpg)