ஊர்க்காவல் படையினருக்கான ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற 26 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஆம்புலன்ஸிலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள பீகார் ராணுவ காவல் மைதானத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி ஊர்க்காவல் படையினருக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். அதன்படி முகாமிற்கு 26 வயது இளம்பெண்ணும் வந்துள்ளார். அப்போது ஆட்சேர்ப்புக்கான நடைமுறையின் ஒரு பகுதியாக உடல் சகிப்புத்தன்மை பரிசோதனை அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த பெண் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் மயக்கமடைந்திருந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், போத்கயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், உடல் பரிசோதனையின் போது தான் சுயநினைவை இழந்ததாகவும், ஆம்புலன்ஸில் சென்ற போது நடந்த சம்பவம் குறித்து ஓரளவு மட்டுமே நியாபகம் உள்ளதாகவும், ஆம்புலன்ஸில் இருந்து 3, 4 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும் தடயவியல் குழுவும் அமைக்கப்பட்டது. இதையடுத்து பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து வழக்குப்பதிவு செய்த சிறப்பு விசாரணைக் குழு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் அதில் இருந்த தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இருவரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து பேசிய லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராஜ் பஸ்வான், பீகாரில் சட்ட ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும், குற்றங்களை தடுக்க தவறிய இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.