Woman explains sudden twist in the Coimbatore kidnapping incident
கோவை மாவட்டம் இருகூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் காரில் கடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இத்தகவல் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு முழுவதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்துக் காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துப் பேசுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை நிற காரில் ஒரு பெண் சத்தமிட்டுக் கொண்டு செல்வதாக, பெண் ஒருவர் (ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்) காவல்துறையின் அவசரக் கால கட்டுப்பாட்டு மைய எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தனர். அதற்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் வகையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதிக்கு வந்துள்ளனர். எனவே ஏஜி புதூரில் உள்ள பேக்கரியின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. அதில் வண்டியின் நம்பர் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதோடு காரில் பெண் இருந்தது தொடர்பாக அந்த பதிவில் தெரியவில்லை. இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக காவல்துறையின் அவசரக் கால கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் மட்டுமே வந்துள்ளது. அதில் காரில் ஒரு பெண்ணின் சத்தம் கேட்டது என்று மட்டும் தான் தகவல் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு எவ்விதமான புகாரும் இதுவரைக்கும் வரவில்லை. இருந்தாலும் கூட சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திற்குப் பின்னால், முன்னால் இருக்கக் கூடிய சிசிடிவி காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். காரின் எண் இன்னும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர், “நானும், எனது கணவர், மகன் ஆகியோர் காரில் வெளியே சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். கோவை ராவுத்தர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது பழங்கள் வாங்கனும் என்று கணவர் கூறி என்னை காரில் இருந்து இறங்க சொன்னார். ஆனால், நான் இறங்க மாட்டேன் என்று சொன்னேன். அப்போது, எங்களுக்கு சண்டை வந்து நான் காரில் இருந்து கீழே இறங்க பார்த்தேன். அப்போது மகனும், கணவரும் கீழே இறங்கி உங்க வீட்டுக்கு போனால் பெரிய பிரச்சனை ஆகிவிடும், நீ வா என்று கூறினர். நான் வரல என்றேன். அப்போது வீட்டுக்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்றார். அதன் பின்னர் என்னை அவர் அடித்தார், நானும் அவரை திருப்பி அடித்தேன். அப்போது காரில் இருந்த மகன், ஏன் மானத்தை வாங்குகிறீர்கள் என்று எங்களை கண்டித்து காரை எடுங்கள் என்றார். நாங்கள் புறப்பட்டு வந்துவிட்டோம். இது தான் நடந்தது” எனக் கூறினார்.
Follow Us