பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையை தடுக்க முயன்ற பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தாய் வீட்டில் குழந்தைகள் வசித்து வருகின்றனர். கணவர் வேலைக்கு சென்ற நிலையில் கடந்த 24 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஸ்வினி கொள்ளையடிக்க வந்தவர்களை தடுக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது அஸ்வினியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அஸ்வினி கீழே மயங்கி விழுந்துள்ளார். கழுத்து பகுதியிலும் அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் தரதரவென இழுத்துச் சென்று ஒரு பகுதியில் போட்டுவிட்டு அந்த நபர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
எதேர்சையாக அஸ்வினியின் உறவினர்கள் வீட்டிற்கு சென்ற போது ரத்த வெள்ளத்தில் அஸ்வினி கீழே கிடந்துள்ளார். உடனடியாக 108க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அஸ்வினி சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அஸ்வினி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீட்டில் இருந்த 8 சவரன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான அஸ்வினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.