Advertisment

ஓடும் ரயிலில் உணவு சமைத்த பெண்; வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

4

ரயிலின் AC கோச்சில் எலெக்ட்ரிக் கெட்டில் மூலம் நூடுல்ஸ் சமைத்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

மும்பை-ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயிலின் AC கோச்சில் பயணித்த ஒரு பெண், இருக்கையில் அமர்ந்தபடியே செல்போன் சார்ஜ் செய்யப் பயன்படுத்தப்படும் ப்ளக் பாயிண்டில் எலெக்ட்ரிக் கெட்டிலைச் செருகி நூடுல்ஸ் சமைத்துள்ளார். அருகில் இருந்த சில பயணிகளும் அவருக்கு உதவி செய்துள்ளனர். இதைப் பார்த்து கேள்வி எழுப்பிய பயணிகளிடம், “இதே கெட்டிலில் ஏற்கெனவே 10 பேருக்கு டீ போட்டுக் கொடுத்து இருக்கிறேன்” என்று அந்தப் பெண் பதிலளித்ததாக வீடியோவில் தெரிகிறது.

Advertisment

வீடியோ வைரலானதும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “ரயிலில் சமைக்கும் போது தீப்பிடித்தால் என்ன ஆகும்?”, “பொது இடத்தில் இப்படித்தான் அறிவு இல்லாமல் நடந்துகொள்வதா?” என்று பலரும் ஆத்திரத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்திய ரயில்வே இச்சம்பவத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்ணை அடையாளம் கண்டு அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ரயில்வே விதிப்படி, எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற உயர் மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தீவிபத்து, மின்சாரக் கோளாறு உள்ளிட்ட பெரும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

பட்டாசு, சமையல் எரிவாயு சிலிண்டர், அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றுடன் எலெக்ட்ரிக் கெட்டில், இண்டக்ஷன் ஸ்டவ் போன்ற சமையல் சாதனங்களையும் ரயிலில் எடுத்துச் செல்லவோ பயன்படுத்தவோ கூடாது என்று ரயில்வே விதிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன. அதை மீறி அலட்சியமாக நடந்துகொண்ட இந்தச் சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Mumbai railway Train
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe