வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸ் (வயது 21). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாபாவின் மகன் காஜா ரபீக் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. திருமணமான நாள் முதல், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கணவரின் குடும்பத்தினர், “மகனுக்கு தொழில் தொடங்க வேண்டும், உன் தந்தையிடம் பணம் வாங்கி வா,” என முதலில் வாய்மொழியாகப் பேசி துன்புறுத்தியதாகவும், பின்னர் காஜா ரபீக் நர்கீஸை அடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி ஜமாத்தாரிடம் புகார் சென்றதையடுத்து, அவர்கள் கணவன் - மனைவியை தனிக்குடித்தனம் வைக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசத்திலிருந்து வேலூர் மாநகரில் உறவினர் வீட்டருகே தனி வீட்டில் குடியேறினர்.
இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த 03.06.2025 அன்று பெற்றோர் தூண்டுதலின் பேரில் கணவர் காஜாரபீக், நர்கீஸை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை முயற்சி ஈடுபட்டதாகும் இதனால் தனது இடுப்பு, வலது, இடது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை ஈடுபட்டு வருவதாக நர்கீஸ் புகாரில் கூறியுள்ளார். ஆரம்பத்தில், நர்கீஸ் மாடியிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறி, காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படவில்லை. உதவி காவல் ஆய்வாளர் பாபாவும் இதனை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நர்கீஸின் குடும்பத்தினரும் இதனை ஆரம்பத்தில் நம்பினர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, மயக்கத்தில் இருந்து மீண்ட நர்கீஸ், தனது கணவர் தன்னை மாடியிலிருந்து தள்ளிவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, நர்கீஸின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இருப்பினும், அந்தப் புகார் கடந்த ஒரு மாதமாக பதிவு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர் காஜா ரபீக் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாபா ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, பாதிக்கப்பட்ட நர்கீஸ் ஆம்புலன்ஸில் வந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.சக காவல் அதிகாரியின் மகனின் இந்தக் கொலை முயற்சி புகார் குறித்து, வேலூர் மாவட்ட காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.