Woman complains of being ostracized from town Photograph: (police)
பெண் ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, மீண்டும் ஊருக்குள் வந்ததற்காக காலில் விழ வைத்து அவமானப்படுத்திய தாகக் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே கொண்டாயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியம்மாள் (56) என்பவர் அளித்த புகாரில், அவரது கணவர் ரவி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். மகன்களுக்கு திருமணமாகி குழந்தைகளுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த கிராமத்தில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ராஜன் வாய்க்காலில் கோவில் கட்ட ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது மகன்கள், வெள்ளக்காலங்களில் கோவில் அடித்து செல்லும் அபாயம் இருப்பதாகவும், பட்டா அல்லது நத்தம் புறம்போக்கு பகுதிகளில் கோவில் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் என் மகன்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த உலகநாதன், வீரமணி, சுந்தரம், சுரேஷ், செந்தில், தங்கராசு, கண்ணன், ராஜேந்திரன், ரமேஷ், கலியபெருமாள் உள்ளிட்டோர் அவர்களது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்ததுடன், யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஊரைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் காலமானபோது, அவரது துக்க நிகழ்வில் கலந்து கொண்டதற்காக, “ஊர் கட்டுப்பாட்டை மீறி எப்படி வந்தீர்கள்” எனக் கேட்டு, ராஜாங்கத்தின் மருமகள்கள் சுஜாதா, சுமதி ஆகியோரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே பிணத்தை அடக்கம் செய்வோம் எனக் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார்.
அதன் பின்னரும், ஊர் கோவிலுக்கு சென்றால் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிரட்டுவதாகவும், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது அவதூறாக பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அவரது பேரன்கள் படிக்கும் பள்ளியிலும் மற்ற குழந்தைகளிடம் பேசக்கூடாது என கூறி, சமூக ஒதுக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் தங்களது குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் பைசலிடம் கேட்டபோது, இவர்கள் அனைவரும் ஒரே சமூகம் தான். இது ஊர் தொடர்பான பிரச்சனை என்பதால் வட்டாட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களால் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
Follow Us