பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையை தடுக்க முயன்ற பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தாய் வீட்டில் குழந்தைகள் வசித்து வருகின்றனர். கணவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் ஒன்று பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஸ்வினி கொள்ளையடிக்க வந்தவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது அஸ்வினியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அஸ்வினி கீழே மயங்கி விழுந்துள்ளார். கழுத்து பகுதியிலும் அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் தரதரவென இழுத்துச் சென்று ஒரு பகுதியில் போட்டுவிட்டு அந்த நபர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.

எதேர்சையாக அஸ்வினியின் உறவினர்கள் வீட்டிற்கு சென்றபோது ரத்த வெள்ளத்தில் அஸ்வினி கீழே கிடந்துள்ளார். உடனடியாக 108க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அஸ்வினி சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்தோடு தடுக்க முயன்ற பெண்ணை அரிவாளால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.