ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து போலீசார் நேற்று (26-09-25) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோபி கலிங்கியம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (24) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கோபிசெட்டிபாளையம் அன்பு பவன் சிக்னல் அருகே வந்தபோது, போக்குவரத்து போலீசார் சந்துரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சந்துரு மது அருந்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சந்துரு மீது மது அருந்தி வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்து அதற்கான ரசீதை வழங்கினர்.
இந்நிலையில் சந்துருவின் தாய் வளர்மதி (50), அன்பு பவன் சிக்னல் அருகே வந்து அங்கிருந்த போலீசாரிடம், ‘என் மகன் மீது ஏன் வழக்கு பதிவு செய்தீர்கள்? எங்களால் பணம் கட்ட முடியாது’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘எனது மகன் வண்டியை கொடுக்கவில்லை என்றால் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி’ சென்றார்.
அதனை தொடர்ந்து வளர்மதி, அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்கி கொண்டு மீண்டும் அன்பு பவன் சிக்னல் பகுதிக்கு வந்தார். அங்கு போக்குவரத்து போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், ஓடி சென்று அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து அவரின் மீது தண்ணீரை ஊற்றினார். இதையடுத்து வளர்மதியின் கணவர் ரவியை வரவழைத்து அவரிடம் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து வளர்மதி மற்றும் பெட்ரோல் பங்க் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.