கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய 13 வயது மகன் ரோகித் அங்குள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான்  02 ஆம் தேதி மாலை 4 மணியளவில் மர்ம நபர்களால் சிறுவன் காரில் கடத்தி செல்லப்பட்டார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் இது குறித்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் இரவு புகார் அளித்திருந்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நேற்று (03.07.2025) காலை அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அஞ்செட்டியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சடலம் இருப்பதாகத் தகவல் வந்தது. இதையடுத்து போலீசாரும் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியின் சாலையோரத்தில் சடலமாகக் கிடந்த சிறுவனை மீட்டனர். அங்கிருந்து சிறுவனின் சடலத்தைக் கொண்டு சென்று அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் வைத்துப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த கொலை வழக்கில் மாவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மாதேவா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கொலைக்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாதவன் மற்றும் அவரது காதலி தேவி(20)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோஹித் பார்த்து வெளியே கூறி விடுவான் என்றும் தேவியை ரோகித் அவதூறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த மாதவன் கர்நாடகாவை சேர்ந்த மாதேவா என்ற மற்றொரு நண்பனிடம்சேர்ந்து சிறுவனை காரில் கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.