சேலத்தில் முறையான பயிற்சியின்றி இளைஞர் ஒருவர் பாம்பு பிடிக்க முயன்ற நிலையில் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர் ராஜமுருகன். வெல்டிங் வேலை செய்து வந்த ராஜமுருகனிடம் பக்கத்து வீட்டில் பாம்பு புகுந்ததாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவிக்க ஓடிச் சென்ற ராஜமுருகன் கையில் கிடைத்த குச்சியை வைத்து பாம்பினுடைய தலையை அழுத்திப் பிடித்து அதைப் பிடிக்க முயன்றுள்ளார்.

அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அதைப் பெரிதாக பொருட்படுத்தாத ராஜமுருகன் துணியைக் கட்டிக்கொண்டு மீண்டும் பாம்பைப் பிடித்துள்ளார். பாம்புக் கடி காரணமாக மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முறையான பயிற்சியின்றி முதல் முறையாக அந்த இளைஞர் பாம்பை பிடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த ராஜமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.