அண்மையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு பயணத்தின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு நேற்றே வழக்கை சிபிஐ கையில் எடுத்திருக்கிறது.

Advertisment

அதேபோல் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி கரூரில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் இன்று  20 லட்சம் ரூபாயை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய பரிவர்த்தனை மூலம் பாதிக்கப்பட்ட  குடும்பங்களை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், அதேபோல் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் தலா இரண்டு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது எனவும்  தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்த சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தை பகிர்ந்து கொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்ட ரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்போம். இதனிடையே நாம் ஏற்கனவே அறிவித்தபடி குடும்ப நல நிதியாக 20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிகரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இறைவன் அருளுடன் இந்த கடினமான தருணத்தைக் கடந்து வருவோம். நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.