35 வயது பெண்ணை வடிகால் மற்றும் கழிப்பறைத் தண்ணீரை குடிக்க வைத்து மந்திரவாதி ஒருவர் மாயச்சடங்கு செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ]

உத்தரப் பிரதேசம் மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் உள்ள பஹல்வான் பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான அனுராதா. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், அவர் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், ஆன்மீக வழிமுறைகள் மூலம் மந்திரவாதி ஒருவர், கருத்தரிக்க உதவுகிறார் என்ற செய்தியை அனுராதா கேள்விப்படுகிறார். தான் கருத்தரிக்க வேண்டும் என்ற ஆசையில், மந்திரவாதியான சந்து என்ற நபரை அனுராதா தனது தாயுடன் சேர்ந்து சந்தித்துள்ளார்.

அப்போது மந்திரவாதி சந்துவும் மற்றும் அவரது உதவியாளர்களும், அனுராதாவுக்கு ஒரு தீய ஆவி பிடித்திருப்பதாகவும், அதற்கு மாந்திரீக சடங்கு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த சடங்கு செய்ய அனுராதாவும் அவரது தாயாரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி, மாந்திரீக சடங்கு நடைபெற்றுள்ளது. சடங்கின் போது மந்திரவாதியும் அவரது உதவியாளர்களும், அனுராதாவின் தலைமுடியை இழுத்து கழுத்து மற்றும் வாயை வலுக்கட்டாயமாக அழுத்தியுள்ளனர். மேலும், வடிகால் மற்றும் கழிப்பறையில் இருந்து அழுக்கு நீரை எடுத்து வந்து அவருக்கு ஊற்றி வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளனர். இதனை கண்ட அனுராதாவின் தாயார், அவர்களைத் தடுக்க முயன்றார். ஆனால் அவரை அலட்சியப்படுத்திய மந்திரவாதி, தொடர்ந்து மாந்திரீக சடங்கு செய்துள்ளார்.

இதனிடையே, அனுராதாவின் உடல்நிலை மோசமடைந்து மயக்கமடைந்துள்ளார். உடனடியாக மந்திரவாதியும் அவரது உதவியாளர்களும் அனுராதாவை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து அனுராதாவின் உடலை அங்கேயே விட்டுவிட்டு, மந்திரவாதி மற்றும் அவரது குழு உடனடியாக மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அனுராதாவின் தாயாரும், தந்தை பலிராம் யாதவும் இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தனர்.

Advertisment

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அனுராதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதன்படி, மந்திரவாதி சந்துவை கைது செய்து அவரது உதவியாளர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், மந்திரவாதி சந்து தனது வீட்டில் சிறிய கோயில்கள், மணிகள் மற்றும் சிலைகளுடன் கூடிய போலி ஆன்மீக அமைப்பை உருவாக்கி ஊரில் நடமாடி வந்துள்ளார். அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களும், மாந்திரீகம் செய்வதற்காக இவரை அடிக்கடி பார்த்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் கருத்தரிக்க வேண்டும் என்ற ஆசையில் அனுராதா, சந்துவை பார்த்துள்ளார். அதற்காக அவரிடம் ரூ.1 லட்சம் பணத்தை மந்திரவாதி சந்து பெற்றுள்ளார். அதன்படி, மந்திரவாதி சந்து, தனது மனைவி மற்றும் இரண்டு பேருடன் சேர்ந்து அமானுஷ்ய சடங்குகள் செய்வதாகக் கூறி அனுராதாவை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் அங்கு நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.