கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் நடைபெற்ற பாமக-வின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில், தனது இருக்கைக்கு அடியில் விலை உயர்ந்த அதிநவீன ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக  பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில்,  ராமதாஸ் தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் இந்த விவகாரத்தைத் தெரிவித்திருந்தார். அவர்கள் ஒட்டுக் கேட்கும் கருவியை சென்னைக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

சைபர் குற்றப்பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏ.டி.எஸ்.பி.) தினகரன் தலைமையிலான கிளியனூர் காவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் ஆகியோர், கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக  ராமதாஸின் இல்லத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களிடம் விசாரணை நடத்தினர். ஒட்டுக் கேட்கும் கருவி குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்று  போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் ஆய்வு செய்யப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவியை தனியார் துப்பறியும் நிறுவனம் ராமதாஸிடம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, இன்று பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் ஒட்டுக் கேட்கும் கருவியை ஒப்படைத்தார்.