புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகமான விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வயல்வெளியில் உள்ள ஆள் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின் வயர்கள், ஸ்டார்டர், பியூஸ் கேரியர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் கறம்பக்குடி அருகில் உள்ள நெப்பிவயல் கிராமத்தில் விவசாயிகள் புதுப்பட்டி செல்லையா, நடுப்பட்டி பிரவீனா, புதுப்பட்டி சங்கரலிங்கம் ஆகியோருக்குச் சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளில் ஆள் இல்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் கேபிள்களை அறுத்துக் கொண்டு செல்ல முயன்ற நேரத்தில் அங்கு வந்த விவசாயி சங்கரலிங்கம் கேபிள் திருடனை விரட்டிப் பிடித்தார். உடனே கிராமத்தினருக்கும் கறம்பக்குடி போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கறம்பக்குடி போலீசார் பொதுமக்களிடம் இருந்து வயர் திருடனையும் வயர்களை கைப்பற்றிய போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது வயர்கள் திருடிய சிக்கிய நபர் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம் ஒடப்பவிடுதி சமத்துவபுரத்தைச் சேர்ந்த பீர்முகமது மகன் ஷாஜகான் அலி (30) என்பது தெரியவந்தது. மேலும் இதே போல பல ஆழ்குழாய் கிணறுகளில் வயர்கள் திருடி பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல, கீரமங்கலம், வடகாடு காவல் சரகத்திலும் தொடர்ந்து பல கிராமங்களிலும் பல ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருடப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் திருநாளூரில் பிடிபட்ட சில பைக் திருடர்கள் கீரமங்கலம், வடகாடு பகுதியில் நாங்கள் தான் கேபிள் திருடினோம் என்று விசாரணையில் கூறியுள்ளனர். ஆனால் அதன் பிறகும் அவர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நடவடிக்கை இல்லை என்று வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.